Home Ads

Thursday 9 August 2018

உதயம் முதல் அஸ்தமனம் வரை... கலக நாயகன் கருணாநிதியின் கதை!

சூரிய உதயம்!

1924 ஜூன் 3-ம் தேதி திருக்குவளை என்னும் ஊரில் பிறந்தார் கருணாநிதி. முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதிக்கு மூன்றாவதாகப் பிறந்தவர்தான் மு.க. இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. இவருக்கு மூத்த அக்காக்கள் பெரியநாயகம், சண்முக சுந்தரத்தம்மாள். இவர்களில் சண்முக சுந்தரத்தம்மாள் வாரிசுகள்தாம் முரசொலி மாறன், முரசொலி செல்வம். பெரிய நாயகத்தின் மகன் அமிர்தம்.

முதல் போராட்டம்!

`பள்ளியில் இடமில்லை என்றால், கமலாலயம் தெப்பக்குளத்தில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் கஸ்தூரி ஐயங்காரிடம் சிறுவன் கருணாநிதி வாதிட்டதில் தொடங்கியது அவர் போராட்டம்!

சாதிக் கொடுமைகள், வைதீக ஆதிக்கம் நிறைந்த தஞ்சை மண்ணில் பிறந்த கருணாநிதிக்கு, அவற்றுக்கு எதிரான மனநிலை வாய்க்கப் பெற்றிருந்தது. அந்த நேரத்தில், சாதிய ஆதிக்கத்துக்கு எதிராகச் செயல்பட்ட  நீதிக்கட்சியின் பணிகள் கருணாநிதியை இயல்பாக ஈர்த்தன. நீதிக்கட்சியின் பேச்சாளர் பட்டுக்கோட்டை அழகிரி சாமியின் இடிமுழக்கப் பேச்சு சிறுவன் கருணாநிதியைக் கவர்ந்தது. அந்த அழகிரிசாமியின் நினைவாகத்தான், தன் மகன்களில் ஒருவருக்கு அழகிரி என்று பெயரிட்டார்.

சூரிய உதயம் - கருணாநிதி14 வயதில் இந்தி எதிர்ப்பு!

`பள்ளியில் சேர்க்காவிட்டால் உயிரைவிட்டுவிடுவேன்’ என்று மிரட்டிய கருணாநிதி என்ற சிறுவனுக்குப் பள்ளிப் பாடங்களைவிட பெரியாரின் பேச்சும் அண்ணாவின் எழுத்துகளும்தாம் பாடங்களாகத் திகழ்ந்தன. பாடப்புத்தகங்களைப் படிப்பதைவிட பெரியாரின் குடிஅரசையே அந்தச் சிறுவன் அதிகம் படித்தான். மாலை நேரத்தில் மாணவர்களை ஊர்வலமாக அழைத்துக்கொண்டு, ``வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப்பேயை விரட்டுவோம் என்று 14 வயதில் கோஷம் போடும் தமிழ் உணர்வுச் சிறுவனாக வளர்ந்தார் கருணாநிதி. 

மாணவ நேசன்!

கருணாநிதி தன் 15 வது வயதில் `மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார். மாதத்துக்கு இரண்டு இதழ்கள். ஒவ்வோர் இதழிலும் 8 பக்கங்கள். இரண்டு படிகள் வெளிவரும். இரண்டு படிகளையும், அதில் உள்ள 16 பக்கங்களையும் கருணாநிதியே தன் கைப்பட எழுதுவார். அதோடு சிறுவர் சீர்திருத்தச் சங்கம், தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்புகளையும் 15 வயதில் தொடங்கி நடத்தி தலைவர் என்ற தகுதியை அப்போதே வளர்த்துக்கொண்டார் கருணாநிதி!

இளமைப் பலி!

அண்ணாவின் திராவிட நாடு இதழில் 1942-ல் கருணாநிதி எழுதிய இளமைப் பலி கட்டுரை வெளியானது. அப்போது அவருக்கு வயது 18. அதை அந்த ஊர் முழுவதும் கையில் வைத்துச் சுற்றினார் கருணாநிதி. கடைகளில் அவரே அந்தக் கட்டுரை இடம் பெற்றிருந்த செய்தித்தாளை எல்லோர் பார்வையிலும் படும்படி வைத்தார். அதில் கருணாநிதியின் கட்டுரையைப் படிப்பவர்கள் என்ன விமர்சனம் செய்கிறார்கள் என்பதை அருகிலிருந்து கவனிப்பார் கருணாநிதி. அப்போதுமுதல், தன் மீதான விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும் பக்குவமும் வளர்ந்தது அவருக்கு.

பெரியாரின் துணை ஆசிரியர்

பாண்டிச்சேரியில் திராவிடர் கழக மாநாடு கலவரத்தில் முடிந்தது. அதில் கடுமையாகத் தாக்கப்பட்டார் கருணாநிதி. சுயநினைவு இழந்து சாக்கடையில் வீசப்பட்ட கருணாநிதியை ஒரு மூதாட்டி காப்பற்றினார். அதன் பிறகு மாறுவேடத்தில் மீண்டும் மாநாட்டுக்குச் சென்றார். கருணாநிதியின் உடம்பில் இருந்த காயங்களுக்குத் தன் கைகளால் மருந்து தடவியதில் நெகிழ்ந்துபோனார். அதன்பிறகு, பெரியாரிடம் குடி அரசு நாளிதழில் துணை ஆசிரியராக ஒன்றரை வருடம் பணியாற்றினார்.

வாழ்நாள் தோழன்!

1942-ல் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் ஆண்டுவிழா - திருவாரூரில் நடந்தது. இந்த விழாவுக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்த்துப் பா எழுதி அனுப்பினார். அந்த விழாவில் கலந்துகொண்ட வி.ஐ.பி பேராசிரியர் அன்பழகன். அப்போது தொடங்கிய அந்தத் தோழமை கருணாநிதியின் இறுதிநாள் வரை தொடர்ந்தது.

பெரியாருடன் கருணாநிதி - சூரிய உதயம்

மண வாழ்க்கை!

1944-ல் கருணாநிதிக்கு பத்மாவதியோடு திருமணம் முடிந்தது. திருமணம் முடிந்த அடுத்த வாரத்தில் 10 நாள்கள் சொற்பொழிவாற்றச் சுற்றுப் பயணம் கிளம்பிவிட்டார் கருணாநிதி. கருணாநிதி-பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர்தான் மு.க.முத்து. 1948-ல் குழந்தையைப் பெற்றுவிட்டு பத்மாவதி மறைந்துவிட்டார்.

1948 செப்டம்பர் 15-ல் தயாளு அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார் கருணாநிதி. அண்ணாவின் பிறந்த நாளில் இந்தத் திருமணம் நடைபெற்றது. அழைப்பிதழில் அண்ணாவின் பெயர் தலைமைச் சொற்பொழிவாளர் என்று இருந்தது. கருணாநிதி-தயாளுக்குத் தம்பதிக்குப் பிறந்த பிள்ளைகள்தாம் அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு. அதன் பிறகு ராஜாத்தி அம்மாளையும் கருணாநிதி திருமணம் செய்து கொண்டார்.

எம்.ஜி.ஆரும் சிவாஜியும்!

1948-ல் `அபிமன்யு’ திரைப்படத்துக்குக் கருணாநிதி வசனம் எழுதினார். ஆனால், டைட்டில் கார்டில் அவர் பெயர் இடம்பெறவில்லை. அதனால், கோபித்துக்கொண்டு திருவாரூர் சென்றுவிட்டார். அப்போதுதான் முரசொலி வார இதழாக உருவெடுத்தது. அதன் பிறகு, `ராஜகுமாரி’ என்ற படத்துக்கு வசனம் எழுத அழைப்பு வந்தது. அந்தப் படத்தின் கதாநாயகன்தான் எம்.ஜி.ஆர். கருணாநிதி வசனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்களான `ராஜகுமாரி’, `மந்திரிகுமாரி’, `மருதநாட்டு இளவரசி’ படங்கள் பெரும் வெற்றி பெற்றன.

`பராசக்தி’ என்ற சமூகக் கருத்துள்ள படத்துக்கும் கருணாநிதி வசனம் எழுதினார். அந்தப் படத்தில் கருணாநிதியின் வசனத்தைப் பேசிய சிவாஜி கணேசன் என்ற மெல்லிய உடல்வாகு கொண்ட இளைஞனுக்கு அதுதான் முதல்படம். கருணாநிதியின் வசனத்தால் அந்த இளைஞன் புகழ் அடைந்தாரா... அந்த இளைஞன் பேசியதால், கருணாநிதியின் பராசக்தி வசனம் பிரபலம் அடைந்ததா... என்பது விடை தெரியாத விநோதம்! எப்படியோ பராசக்தியின் வசனங்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தன. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நெளிந்தது; கருணாநிதியையும் பராசக்தியையும் எதிர்த்து காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதாகப்போனது.

சிவாஜியும் கருணாநிதியும் - சூரிய உதயம்

பெரியாரிடமிருந்து பிரிந்த அண்ணா, 1949-ல் பெரியார் பிறந்த நாளில் செப்டம்பர் 17-ல் தி.மு.க-வை அண்ணா உருவாக்கினார். கருணாநிதியும் அண்ணாவுடனேயே வந்துவிட்டார். 25 வயது இளைஞரான கருணாநிதியை தி.மு.க பிரசாரக் குழு உறுப்பினராக்கினார் அண்ணா.

1953-ல் இந்திக்கு எதிராக மும்முனைப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா. அதில் ஒரு முனைக்குத் தளபதியானார் கருணாநிதி. டால்மியா புரம் ரயில் நிலையப் பெயர்ப் பலகையில் தமிழில் கல்லக்குடி என்று பெயர் எழுதிய சுவரொட்டியை ஒட்ட வேண்டும். அந்தப் போராட்டத்தில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்தார் கருணாநிதி. அது கட்சிக்குள்ளும் வெளியிலும் கருணாநிதியின் பெயரை பிரபலப்படுத்தியது. 1954-ல் கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் இணைந்து உருவாக்கிய `மலைக்கள்ளன்’ திரைப்படம் இருவருக்கும் ஒரு மைல் கல்லானது.

தேர்தல் நாயகன்!

1957 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க முதல்முறையாகப் போட்டியிட்டது. அதில் குளித்தலை தொகுதியைக் கருணாநிதிக்கு ஒதுக்கினார் அண்ணா. அப்போது தொடங்கியது கருணாநிதியின் தேர்தல் வெற்றி 2016 சட்டமன்றத் தேர்தல் வரையிலும் தொய்வின்றித் தொடர்கிறது. 13 வது முறையாகத் திருவாரூரில் வெற்றி பெற்றுள்ளார்.

1959-ல் சென்னை மாநகராட்சித் தேர்தல். அண்ணா சில இடங்களில் மட்டும் கழக வேட்பாளர்களை நிறுத்தலாம் என நினைக்கிறார்; அதற்குப் பிடிவாதமாக மறுத்த கருணாநிதி அண்ணாவிடம் அடம்பிடித்து 100 இடங்கள் உள்ள சென்னை மாநகராட்சிக்கு 90 இடங்களில் தி.மு.க வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் 45 இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். சென்னை மாநகராட்சி தி.மு.க வசமானது. 

1960-ல் கருணாநிதி கட்சியின் பொருளாளர் ஆனார். உட்கட்சிப் பூசல்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் பொதுக்குழுவில், அண்ணா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஈ.வெ.கி சம்பத் அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தே ஆண்டுகளில் கட்சியின் மூன்றாவது இடத்துக்கு வந்திருந்தார் கருணாநிதி. இத்தனைக்கும் அண்ணாவுக்கு இருக்கும் கல்வியும், ஈ.வெ.கி சம்பத்துக்கு இருந்த குடும்பப் பின்னணியும் கருணாநிதிக்குக் கிடையாது.

ஆட்சியே நோக்கம்!

1962 தேர்தலில் 50 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க வென்றது. அதிலும் சுற்றிச் சுழன்று செயல்பட்டார் கருணாநிதி. கருணாநிதியும் வெற்றி பெற்றார். ஆனால், அடுத்த தேர்தலில் இதுபோன்ற உதிரி வெற்றிகள் கூடாது; ஆட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டும் என்ற வேகமும் வெறியும் கருணாநிதிக்கு அண்ணாவைக் காட்டிலும் அதிகம் இருந்தது.

அண்ணாவுடன் கருணாநிதி - சூரிய உதயம்

1967 தேர்தலை மிகப்பெரிய அளவில் சந்திக்க 1963-லேயே தி.மு.க-வைத் தயார்படுத்தினார் கருணாநிதி. 4 ஆண்டுகளுக்குப் பிறகு, வரப்போகிற தேர்தலுக்கான வியூகத்தை 1963-ல் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே வகுத்துக் கொடுத்தார் கருணாநிதி. அதன்படி 200 தொகுதிகளில் கட்சி போட்டியிட வேண்டும்; ஒரு தொகுதிக்கு 5,000 ரூபாய் செலவு செய்ய வேண்டும்; அந்த நிதியைத் திரட்ட இப்போதே வசூலைத் தொடங்க வேண்டும் என்ற கருணாநிதி, அந்தப் பொறுப்பையும் தன் தோளில் தானே ஏற்றி வைத்துக்கொண்டார். ஒரு தொகுதிக்கு 5,000 என்றால், 200 தொகுதிக்கு 10 லட்சம் ரூபாய். அவரே அந்தத் தொகையைத் திரட்டும் பணியையும் ஏற்றுக்கொண்டார்.

அண்ணாவின் புண்ணிய பூமி!

1963-ல் இந்தி எதிர்ப்புப் போர் மீண்டும் தொடங்கியது. தி.மு.க சூறாவளியாகக் களமிறங்கியது. அதையடுத்து, 1965-ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி கருணாநிதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு கருணாநிதியை வந்து பார்த்த அண்ணா, ‘என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் இருக்கும் இந்த இடம்தான் யாத்திரை செய்ய வேண்டிய புண்ணிய பூமி’ என்றார்.

1966-ல் விருகம்பாக்கத்தில் தி.மு.க தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. 1963-ல் கடற்கரை கூட்டத்தில் சொன்னதுபோல், 10 லட்சத்தோடு கூடுதலாக ஒரு லட்சம் சேர்த்து 11 லட்ச ரூபாயை அண்ணாவிடம் வழங்கினார் கருணாநிதி. அங்கு தி.மு.க வேட்பாளர்களை அறிவித்த அண்ணா, சைதாப்பேட்டை என்று சொல்லிவிட்டு நிறுத்தியவர், வேட்பாளர் பெயர் கருணாநிதி என்று சொல்லாமல், ‘11 லட்சம்’ என்றார். கூட்டம் ஆர்ப்பரித்தது.

கருணாநிதி கனவு கண்டதுபோல், தி.மு.க 1967 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதல் அமைச்சர் ஆனார். அண்ணாவின் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் நாவலரும் மூன்றாவது இடத்தில் கருணாநிதியும் இடம்பிடித்தனர்.

அண்ணா அறிந்தவர்... அண்ணாவை அறிந்தவர்!

அண்ணாவும் கருணாநிதியும் - சூரிய உதயம்

தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியதும், அண்ணா ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கருணாநிதி அண்ணாவைப் பார்க்க அவசரமாக வருவதாக அண்ணாவுக்குத் தகவல் சொல்லப்பட்டது. அதைக் கேட்டு அருகில் இருந்தவர்களிடம், ``கருணாநிதி இப்போது வந்து போலீஸ் இலாக்காவைக் கேட்பார் பாருங்கள்” என்று சொன்னார். அவர் சொன்னதுபோலவே, அண்ணாவைச் சந்தித்த கருணாநிதி போலீஸ் இலாக்காவைக் கேட்டார். யோசித்துச் சொல்கிறேன் என்று கருணாநிதியிடம் பதில் சொன்னார். பக்கத்தில் இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டு, `எப்படிச் சரியாகக் கருணாநிதி இதைத்தான் கேட்பார்’ என்று கணித்தீர்கள் என்று கேட்டபோது, அண்ணா லேசாகப் புன்னகைத்தார். பொதுப்பணித்துறை கருணாநிதிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் பேருந்துகளை அரசுடைமையாக்கினார். வீராணம் திட்டத்துக்கு அடித்தளம் இட்டார். அதுபோல், அண்ணாவே ஒருமுறை, ``என்னை நன்றாக அறிந்தவர் கருணாநிதி. மற்றவர்கள் நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்று தெரியாமல் எதையாவது உளறிக்கொட்டி என்னிடம் திட்டு வாங்குவார்கள்; ஆனால், கருணாநிதி நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதைச் சரியாகத் தெரிந்துகொண்டு, நான் யார் மீது, எந்த விஷயத்தில் கோபமாக இருக்கிறேனோ... அதில் தனக்கும் உடன்பாடு இல்லை என்பதுபோலவே கருணாநிதி பேசுவார். அதன்பிறகு, என் கோபம் தணிந்ததும், அவருடைய கருத்தை ஆணித்தரமாக எடுத்துச் சொல்வார்” அந்த அளவுக்கு என்னை இந்தக் கழகத்தில் நன்றாக அறிந்தவர் கருணாநிதி என்றார்.

யார் முதல்வர்?

1969-ல் அண்ணா மறைந்தார். யார் முதல்வர் என்ற போட்டி நாவலருக்கும் கருணாநிதிக்கும் இடையில் பலமாக இருந்தது. அதில் கருணாநிதியே வெற்றி பெற்றார். அப்போதுதான் அண்ணாவைப்போல் தம்பிகளுக்குக் கடிதம் எழுதவும் தொடங்கினார். தம்பிகளுக்கு எழுதிய கடிதத்தில் ஆரம்பத்தில் தோழா என்றுதான் தொடங்கினார். ஆனால், 1971 ஏப்ரல் மாதத்தில் உடன்பிறப்பே என்று பேசவும் எழுதவும் தொடங்கினார். அவர் பேச்சைத் தொடங்கும்போது, `என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே’ என்று சொல்லும்போது, அந்த வாக்கியத்துக்குக் கூடுதல் நிறுத்தமும் அழுத்தமும் கொடுப்பார்; அதில் கொஞ்சம் உருக்கமும் இருக்கும்! தி.மு.க தொண்டன் மட்டுமல்ல... கேட்பவர் யாராக இருந்தாலும் அதில் கொஞ்சம் மயங்கித்தான்போவார்கள்.

முதல்வர் கருணாநிதி!

முதல்வராக இருந்த கருணாநிதி ஆட்சியில் நில உச்ச வரம்பு 15 ஏக்கராக ஆனது. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சதவிகிதம் 25 முதல் 31 ஆக உயர்த்தப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 16 சதவிகிதம் முதல் 18 சதவிகிதமாக உயர்ந்தது. 1970 டிசம்பர் 2-ல் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது.

வரலாற்றுப் பிரிவு!

1970 காலகட்டத்தில் எம்.ஜி.ஆர்-கருணாநிதிக்கு இடையில் முரண்பாடுகள் முளைவிடத் தொடங்கியிருந்தன. ஆனாலும், 1971 தேர்தலில் கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். 184 இடங்களில் வெற்றி பெற்று தி.மு.க வரலாறு படைத்தது. அப்போது சினிமா ஷூட்டிங்கில் இருந்த எம்.ஜி.ஆர் ``எனக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வேண்டும். அதனால், நான் ஷூட்டிங்கிலிருந்து வரும்வரை அமைச்சரவையை அறிவிக்க வேண்டாம்” என்று கருணாநிதிக்குத் தகவல் அனுப்பினார். உடனடியாக ப.உ.சண்முகம் வீட்டில் அனைவரையும் அழைத்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், ``அது முக்கியமான துறை, அதில் சின்ன தவறு நடந்தாலும் எதிர்க்கட்சிகளின் தாக்குதல் கடுமையாக இருக்கும். அதனால், கட்சிக்கும் பெயர் கெடும்” அதனால், அந்தத் துறையை அவருக்குக் கொடுக்க வேண்டாம் என்றனர். அதன்பிறகு, துறையைக் கொடுக்கலாம், ஆனால், அதற்கு எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கக் கூடாது” என்று கண்டிஷன் போட்டனர். அப்படியே முடிவெடுக்கப்பட்டது. அதை எம்.ஜி.ஆரிடம் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்தான் கொண்டு போய் வாசித்துக் காட்டினார். அப்போது ``அப்போ முடியாதுன்றாங்க.... ” எனக் கோபமாகக் கேட்டார் எம்.ஜி.ஆர்!

கருணாநிதி, எம்.ஜி.ஆர் - சூரிய உதயம்

1972-ல் கருணாநிதி-எம்.ஜி.ஆருக்கு இடையில் இருந்த முரண்பாடுகள் பனிப்போராக மாறியது. 1972 ஜனவரி 17-ல் தஞ்சையில் கூடிய தி.மு.க பொதுக்குழுவில் எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 8-ம் தேதி, திருக்கழுக்குன்றத்தில் பேசிய எம்.ஜி.ஆர், ``கட்சியிலும் ஆட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் கணக்குக் காட்ட வேண்டும்” என்றார். அந்தப் பேச்சு கருணாநிதி-எம்.ஜி.ஆர் பனிப்போரை வெளிப்படையாக்கியது.

எம்.ஜி.ஆருக்குப் பதில் சொன்ன கருணாநிதி, யாரோ ஒரு சலவைத் தொழிலாளி, சீதையைச் சந்தேகிக்கிறான்... அதனால், சீதையை ராமன் அனுப்பினான் காட்டுக்கு! ராமன் அனுப்பலாம். ராமச்சந்திரன் இப்படிக் கழகத்தை காட்டுக்கு அனுப்பத் துணியலாமா என்று கேட்டார்.

அ.தி.மு.க அழியக் கூடாது!

1972 அக்டோபரில் எம்.ஜி.ஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அக்டோபர் 17-ல் அ.தி.மு.க-வைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். `எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க முற்றிலும் அழிந்துவிட வேண்டும்’ என்று எப்போதும் கருணாநிதி நினைத்ததில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.  ``எம்.ஜி.ஆரின் பிரிவில் டெல்லியின் சூழ்ச்சி இருந்தது” என்று உறுதியாக நம்பினார் கருணாநிதி. அதற்குக் காரணங்களும் இருந்தன. எம்.ஜி.ஆர் டெல்லிவரை சென்று கருணாநிதிக்கு எதிராக ஊழல் புகார்களைக் கொடுத்தார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்றார். அது கருணாநிதிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

தமிழகத்தின் மேக்ன கர்ட்டா!

1975 ஜூன் 25-ல் நெருக்கடி நிலையை அறிவித்தார் பிரதமர் இந்திரா காந்தி. அதையடுத்து 24 மணி நேரத்தில் தி.மு.க பொதுக்குழுவைக் கூட்டிய கருணாநிதி, தன் கைப்பட ஒரு கண்டன அறிக்கையை எழுதினார். அதுதான் அதிகாலை 4 மணிக்கு அந்தப் பொதுக்குழுவின் தீர்மானமாக நிறைவேறியது. அதில், இந்திரா காந்தி சர்வாதிகாரத்துக்கான தொடக்கவிழாவை நடத்தியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி. அந்த அறிக்கையை `தமிழகத்தின் மேக்னா கர்ட்டா’ என்று இப்போதும் குறிப்பிடுவார் வைகோ!

நெருக்கடி தந்த நெருக்கடி நிலை!

1976 ஜனவரி 31-ல் தி.மு.க ஆட்சி முதல்முறையாகக் கலைக்கப்பட்டது. தி.மு.க-வின் மீது அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. மாறனையும், மு.க.ஸ்டாலினையும் கைது செய்ய வீட்டுக்கு போலீஸ் வந்தது. அந்த நேரத்தில் வீட்டில் இருந்த கருணாநிதி, ``மாறன் டெல்லியில் இருக்கிறார்; ஸ்டாலின் ஒரு கூட்டத்துக்குப் போயிருக்கிறார்; அவர்கள் வந்ததும் நானே அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்ன கருணாநிதி, மறுநாள் காலை இருவரையும் போலீஸ் நிலையத்துக்குச் சொன்னபடி அனுப்பி வைத்தார். அப்போது ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டார். தி.மு.க-வினரை சிறைக்குள் வைத்துச் செய்த சித்ரவதையில் ஸ்டாலினைக் கொலை செய்யும் அளவுக்குப்போனது. அதைத் தடுக்க முயன்ற சிட்டி பாபு அடிபட்டே செத்துப் போனார்.

ஈழம்தான் பெருமை!

தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு 1976 பிப்ரவரி 15-ம் தேதி சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் பேசிய அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, ``விடுதலைப் புலிகளை ஆதரித்து இலங்கை-இந்தியாவின் நட்பு கெடுவதற்கு கருணாநிதி காரணமாக இருக்கிறார் என்றார். ``தி.மு.க-வின் ஆட்சி கலைக்கப்பட அதுதான் காரணம் என்றால், தி.மு.க-வுக்கு அதைவிடப் பெருமை இருக்க முடியாது” என்று பதிலடி கொடுத்தார் கருணாநிதி. அந்தக் காலகட்டத்தில் கடுமையான பத்திரிகைத் தணிக்கை இருந்தது. எல்லாவற்றையும் சாதுர்யமாகச் சமாளித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3 அன்று அண்ணா சதுக்கத்துக்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் வெளியிட்டார். மிசா சட்டத்தில் யார் யாரெல்லாம் கைது செய்யப்பட்டவர்கள் என்ற பட்டியல் அது. அதைச் சாதுர்யமாக அவர் வெளியிட்டார்.

நண்பர் தலைவரானார்!

க.அன்பழகன், கருணாநிதி

தி.மு.க-வை கலாசாரக் கழகமாக மாற்றலாம் என்றனர் சிலர். கருணாநிதி அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ``கப்பல் கேப்டன் மூழ்கும் கப்பலை விட்டுச் செல்வதில்லை என்றார். எமர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்த கருணாநிதியின் போர்க்குணம்தான், தி.மு.க-வில் கருணாநிதியின் தலைமையை அதுவரை ஏற்றுக்கொள்ளாதவர்களையும் ஏற்க வைத்தது. அதன்பிறகுதான் பேராசிரியர் அன்பழகன், ``தன் நண்பர் கருணாநிதியை தலைவர் கருணாநிதியாக ஏற்றுக்கொண்டேன்” என்று இப்போதும் சொல்வார்.

தி.மு.க-தான் உயிர்!

எமர்ஜென்சி நேரத்தில் தி.மு.க-வுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற நிலை இருந்தது. அப்போது கருணாநிதி, நாவலர், நாகநாதன் மூவரும் பீச்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது இதைப் பற்றிய விவாதம் வந்தபோது, நாவலர், ``கட்சியைத் தடை செய்தால் என்ன? வேற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்குவோம்! அதற்கு ஏன் கவலைப்படறீங்க? என்றார். அப்போது குறுக்கிட்ட கருணாநிதி, ``அப்படியில்ல நாவலர், தி.மு.க அண்ணா தொடங்கியது. அதில் அவரின் உயிர் இருக்கிறது. இதைத் தடை செய்தால், கட்சியைக் கொஞ்சம் தள்ளிவைத்து நடத்துவோம். எம்.ஜி.ஆர் நடத்தும் கட்சியில் அண்ணாவும் இருக்கிறது. தி.மு.க-வும் இருக்கிறது. நாம் அதைப் பார்த்துக் கூட ஆறுதல் அடைந்து கொள்வோம். ஆனால், வேறு பெயரில் கட்சியைத் தொடங்க வேண்டாம். தி.மு.க திரும்ப முளைக்கும் நாவலரே! என்றார்.

ஆட்சியில் இருந்து வனவாசம்!

1977-ல் எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது. ஆனால், அதே ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். அப்போது இருந்து 1989 வரை கருணாநிதியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் எம்.ஜி.ஆருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் கருணாநிதி. உள்ளாட்சித் தேர்தல்களில் ஒருநாளும் எம்.ஜி.ஆரால் ஜொலிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆட்சி கையில் இல்லாதபோதும், தி.மு.க என்ற கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் கருணாநிதி. சட்டமன்றத்திலும், அரசியல் அரங்கிலும் கருணாநிதி எதிரில் இருந்து எழுப்பும் பிரச்னைகளை மையமாக வைத்தே எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தது.

1977 ஆகஸ்ட் 8-ம் தேதி இலங்கைத் தமிழர்களுக்காகப் பல லட்சம் பேரைத் திரட்டி பிரமாண்ட பேரணியை நடத்தினார் கருணாநிதி. 1981 செப்டம்பர் 15-ம் தேதி இலங்கைத் தமிழர் விவகாரத்துக்காக எம்.ஜி.ஆர் அரசு கருணாநிதியைக் கைது செய்தது. 1983-ல் மத்திய மாநில அரசுகள் இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை காட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கருணாநிதியும், பேராசிரியர் அன்பழகனும் அறிவித்தனர்.

மீண்டும் முதல்வர்!

1989-ல் மீண்டும் கருணாநிதி முதல் அமைச்சரானார். அந்தக் காலகட்டத்தில்தான் பெண்களுக்குச் சொத்துரிமை, அரசுப் பணிகளில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவிகிதம் தனி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் இந்தியா இலங்கைக்கு அமைதிப்படை என்ற பெயரில் ராணுவத்தை அனுப்பி வைத்தது. தமிழர்களின் நலனைக் காப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட அமைதிப்படை, இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறியது. அது டெல்லி போவதற்கு முன் தமிழகம் வந்தது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அமைதிப்படையை வரவேற்கப் போகவில்லை. ஏன் போகவில்லை என்ற கேள்வி எழுந்தபோது, ``இந்திய ராணுவம் தமிழர்களை தாக்கி நசுக்கிட முயற்சி செய்ததால்தான் அவர்களை வரவேற்கச் செல்லவில்லை” என்றார் கருணாநிதி. அந்தப் பதில் டெல்லியிலும், இலங்கையிலும் அதிர்ச்சியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு விடுதலைப் புலிகள் நடமாட்டம் தமிழகத்தில் இருப்பதாகச் சொல்லி தி.மு.க அரசு 1991-ல் மீண்டும் கவிழ்க்கப்பட்டது.

கருணாநிதி

1991 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் நடைபெற்ற ராஜிவ் படுகொலை தி.மு.க-வின் வெற்றியைப் பறித்தது. அப்போது நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க சார்பில் கருணாநிதி மட்டும்தான் வெற்றி பெற்றார். ஒத்திவைக்கப்பட்ட தொகுதியில் தேர்தல் நடந்தபோது பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றார். அதில் கருணாநிதி தன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அந்தக் காலகட்டத்தில் தி.மு.க-வின் அஸ்தமனம் ஆரம்பித்துவிட்டதாக பலர் ஆருடம் சொன்னார்கள்.

1993-ல் தி.மு.க-வின் போர்வாள் என்றழைக்கப்பட்ட வைகோவுக்கும் கருணாநிதிக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. தி.மு.க-விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டார். அப்போது அவருடன் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் 9 பேர் போனார்கள். அதை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய தமிழ் மாநிலச் செயலாளர் சங்கரய்யா, தி.மு.க-வில் நிகழ்ந்த செங்குத்துப் பிளவு என்று வர்ணித்தார். ஏனென்றால், எம்.ஜி.ஆர் பிரிந்தபோதுகூட இத்தனை மாவட்டச் செயலாளர்கள் அவரோடு போகவில்லை. அதனால், தி.மு.க-வின் அஸ்தமனம் ஆரம்பித்துவிட்டது என்று அப்போது பலரும் ஆருடம் சொன்னார்கள். 

நல்லாட்சி நாயகன்!

எல்லா ஆருடங்களையும் பொய்யாக்கி 1996-2001ல் ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. மிகப்பெரிய வெற்றி பெற்றார். அந்த ஆட்சியில்தான், பெண்களுக்கு உள்ளாட்சியில் 33 சதவிகித இட ஒதுக்கீடு, தொழில் முனைவோருக்கு ஒற்றைச் சாளர முறை, டைடல் பூங்கா, அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு, நெம்மேலி கடல்நீர் திட்டம், மெட்ரோ ரயில், ஒகேனக்கல்- பரமக்குடி கூட்டுக்குடி நீர்த் திட்டம்,  உழவர் சந்தை, சமத்துவ புரம் எல்லாம் கொண்டு வந்தார். சிறப்பான ஆட்சியாக இருந்தாலும், அதன்பிறகும் தி.மு.க தேர்தலில் தோற்றது. சிவீல் சர்வீஸ் நேர்முகத் தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளில், `கருணாநிதியின் அந்த ஆட்சிக்காலம் தமிழகத்தின் மிகச்சிறந்த ஆட்சிக் காலம் என்றும், ஆனாலும் கருணாநிதி ஏன் தோற்றார்’ என்றும் கேட்கப்பட்டது. 

நள்ளிரவு கைது!

முதல்வர் பதவியை கருணாநிதி இழந்ததும், 2001 ஜூன் 30 அன்று நள்ளிரவில் கருணாநிதியின் வீடு புகுந்தது ஜெயலலிதாவின் காவல்துறை. அவ்வளவு ஆற்றல் மிகுந்த அரசியலின் மூத்த தலைவரை போலீஸ் கையை முறுக்கியது... கொல்றாங்களே... கொல்றாங்களே... என்று அலறினார் கருணாநிதி. அந்தக் கதறல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதும் இந்தியாவே கொந்தளித்தது. தமிழகத்தின் கவர்னர் திரும்ப அழைக்கப்பட்டார். தமிழக அரசு கலைக்கப்படக்கூடிய சூழல் உருவானது. நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய கருணாநிதி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட நேரத்தில் கருணாநிதியிடம் ஒரு காகிதம் கொடுக்கப்பட்டது. எதையாவது எழுதிக் கொடுங்கள் என்று கேட்டார் அந்தப் பத்திரிகையாளர் அந்த நெருக்கடியான நேரத்தில் சிரித்துக்கொண்டே கருணாநிதி, `அநீதி வீழும்! அறம் வெல்லும்’ என்று எழுதிக் கொடுத்தார்.

கூட்டணி ஆட்சி!

கருணாநிதி

2006-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றாலும், தி.மு.க-வுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், சாமர்த்தியமாக காங்கிரஸ், பா.ம.க உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சியை 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தினார் கருணாநிதி. அந்தக் காலகட்டத்தில் தி.மு.க அமைச்சர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரமுகர்கள் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர் மீது பல சர்ச்சைகள் எழுந்தன. 2007-க்குப் பிறகு இலங்கையில் இறுதிப்போர் வலுவடைந்துகொண்டே போனது. அதன் அபாயத்தை உணர்ந்த கருணாநிதி, 23 ஏப்ரல் 2008-ல் இலங்கையில் அமைதி ஏற்படுத்த இந்தியா உதவி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். அதன் தொடர்ச்சியாக பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கை அரசின் ராணுவ நடவடிக்கையையும் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையையும் நிறுத்த கருணாநிதி கேட்டுக்கொண்டார்.

முதல்வர் என்ற எல்லைக்குள் முயன்றார்!

ஈழத்தில் நடந்த இறுதிப்போரை நிறுத்த முதல்வர் என்ற எல்லைக்குள் கருணாநிதி முயற்சி செய்தார். 2008 டிசம்பர் 4-ல் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு டெல்லி போனார் கருணாநிதி. பிரதமரைச் சந்தித்து, மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்பச் சொல்லி கேட்டுக் கொண்டார். அதன்பிறகு 28 மார்ச் 2009-ல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதியில் கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். தமிழர்கள் அழிவில் இருந்தனர். அப்போது ராஜினாமா செய்யலாம் என்ற முடிவுக்குக் கருணாநிதி வந்தார். ஆனால், ராஜினாமா செய்தால், இப்போது கொடுக்கும் அழுத்தத்தைக்கூட மத்திய அரசுக்குக் கொடுக்க முடியாது என்று கட்சிக்குள் சொன்னார்கள். அதையடுத்து மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி கொடுத்த வாக்குறுதிகளை நம்பி உண்ணாவிரத்தைக் கைவிட்டார். ஆனால், அவை இலங்கையில் எந்த நம்பிக்கையும் ஏற்படவில்லை. அது கருணாநிதியின் தமிழர் தலைவர் என்ற இமேஜை கொஞ்சம் டேமேஜ் ஆக்கியது.

மீண்டும் வனவாசம்!

2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க படுதோல்வியடைந்தது. சட்டமன்றத்தில் மூன்றாவது இடத்துக்குப் போனது. எம்.ஜி.ஆர் காலத்தில் கூட கருணாநிதிக்கு இப்படிப்பட்ட இக்கட்டான நிலை உருவானதில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் அவர் தேர்தல் பிரசாரத்துக்குப் போகவில்லை. திருவாரூரில் மட்டும் பேசினார். ஆனால், வெற்றி பெற்றார். தி.மு.க-வும் அதுவரை எந்த எதிர்க்கட்சியும் பெறாத அளவுக்கு 89 இடங்களைப் பெற்றது. ஆனால், அதன்பிறகு கருணாநிதியின் பேச்சும், எழுத்தும், நினைவாற்றலும் குறையத் தொடங்கின. அதனால், அவர் பெரும்பாலும் கோபாலபுரம், அறிவாலயம் மட்டும் வந்துபோவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

அறிவாலயம் சொன்ன அபாயச் செய்தி!

2016 செப்டம்பர் 25-ம் தேதி காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி. 2016 அக்டோபர் 25-ம் தேதி அறிவாலயத்திலிருந்து விசித்திரமாக ஓர் அறிக்கை வந்தது. அதில், ``தலைவருக்கு உடல்நலம் சரியில்லை; அதனால், தொண்டர்கள் நிர்வாகிகள் யாரும் தலைவரைப் பார்க்க வர வேண்டாம்” என்று இருந்தது. அதன் பிறகுதான் கருணாநிதியின் வேலைகள் முற்றிலும் பிசகின. அப்போது அவருக்கு ட்ரக்கியோஸ்டோமி பொருத்தப்பட்டது. அப்போது முதல், முழுமையான ஓய்வில் இருந்து வந்தார். 2018 ஜூலை 18-ம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் கருணாநிதி. அன்று மாலை வீடு திரும்பியவருக்குக் காய்ச்சலும் உடல்நலக்குறைவும் அதிகமானது. அதன்பிறகு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 27-ம் தேதி மீண்டும் காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். முதல்முறையாகக் கருணாநிதி ஆம்புலன்ஸில்  காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சரியாக 7 நாள்கள் கழித்து மீண்டும் அவர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதயத் துடிப்பு சில நொடிகள் நின்றன. அதனால், தி.மு.க தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் பதற்றம் அதிகரித்தது. ஆனால், சில நொடிகளில் நின்ற இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தது. 95 வயதில் நின்ற இதயம் துடிக்க ஆரம்பித்தது மருத்துவ உலகின் அதிசயம் என்று சொல்கின்றனர்.

அஸ்தமனம்

அஸ்தமனம்!

2018 ஆகஸ்ட் 7 அன்று மாலை 6.10 மணியளவில் கருணாநிதியின் உயிர் பிரிந்தது. அவர் உடல் அவர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திலும், சி.ஐ.டி நகர் காலனி வீட்டிலும் வைக்கப்பட்டு, 8-ம் தேதி (இன்று) அதிகாலை ராஜாஜி ஹாலுக்குக் கொண்டுவரப்பட்டது.

மரணத்துக்குப் பின்னும் போராட்டம்!

தன் வாழ்நாள் முழுவதும் பொதுவாழ்க்கையில் போராடியர், முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளால் மருத்துவத்துடன் போராடினார். கருணாநிதி, தன் உயிர் மூச்சாக நேசித்த அரசியல், அவர்  இறந்தபிறகும் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை! கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரீனாவில் இடம் இல்லை அரசாங்கம் மறுத்ததால், தி.மு.க நீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மெரீனாவில் இடம் ஒதுக்கித் தரலாம் என்று உத்தரவிட்டது.

இறுதிப் பயணம்!

ராஜாஜி ஹாலிலிருந்து இறுதிப் பயணம் தொடங்கியது. ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ள கருணாநிதியின் கல்லறை வாசகம், ``ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்! 

No comments:

Post a Comment