கேங்க கூட்டிட்டு வரவன் கேங்ஸ்டர்.... ஆனா ஒத்தையா வரவன் 'மான்ஸ்டர்'... கேஜிஎப் விமர்சனம்!

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடக்கும் கொடூரக் கொலைகளும், அதிரடி சம்பவங்களை கோலார் தங்கச் சுரங்கத்துடன் இணைத்து சொல்லும் படம் கேஜிஎப். கதைய...

அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடக்கும் கொடூரக் கொலைகளும், அதிரடி சம்பவங்களை கோலார் தங்கச் சுரங்கத்துடன் இணைத்து சொல்லும் படம் கேஜிஎப்.

கதையின் நாயகன் ராக்கிக்கு (யாஷ்) ஒப்பனிங்கில் இருந்து செம பில்டப். யாருப்பா அந்த ஆள், நமக்கே பார்க்கனும் போல இருக்கே என ஆவல் தூண்டப்படுகிறது. ராக்கி திரையில் வந்த பிறகு அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கிறது. எதிர்ப்பவரை எல்லாம் சகட்டு மேனிக்கு போட்டு தள்ளுகிறார். மும்பை தெருக்களில் ஷூ பாலிஷ் போட்டுக்கொண்டிருந்த சிறுவன், அதே ஊரின் டானாக உயர்கிறான். தனது தாய்க்கு அளித்த வாக்குறுதிபடி, இந்த உலகமே மதிக்கும் பணக்காரனாக உயர வேண்டும் என்பதற்காகவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் யாஷ்.

அப்போது அவனுக்கு ஒரு ஆஃபர் வருகிறது. பெங்களூருவில் ஒரு முக்கிய புள்ளியை போட்டு தள்ளினால் மும்பை ராக்கி வசம் என்கிறார்கள். டீலிங்குக்கு ஓகே சொல்லி கிளம்புகிறார். அங்கே சென்ற பிறகு தான் தெரிகிறது, தான் போட்டு தள்ள வந்த ஆள் கோலார் தங்க சுரங்கத்தை தன் கைக்குள் வைத்திருக்கும் மிகப்பெரிய திமிங்கிலம் என்பது. திமிங்கிலம் வேட்டையாட அதோட இடத்துக்கே செல்கிறார் ராக்கி. திமிங்கிலத்தை வேட்டையாடி, தங்க சுரங்கத்தை ராக்கி எப்படி கைப்பற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை.

அசால்ட்டான உடல் மொழி, திமிரு பிடித்த பார்வை, எதையும் துணிந்து செய்யும் நெஞ்சுறும், யாருக்கும் பயப்படாத மன தைரியும்... இது தான் ராக்கி கதாபாத்திரம். மிக கச்சிதமாக செய்திருக்கிறார் கன்னடத்தின் ராக்கிங் ஸ்டார் யாஷ். ஒவ்வொரு அடியும் இடி மாதிரி விழுகிறது. காதல், கருணை, கோபம், வெறி, நிதானம் என நடிப்பில் அசத்துகிறார்.

ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார் யாஷ். பாகுபலி ரானா போன்ற உடலமைப்பை கொண்டிருப்பதால், எத்தனை பேரை அடித்தாலும் அதில் நம்பகதன்மை ஏற்படுகிறது. ஆனால் எப்போதும் சரக்கடித்த மாதிரியே முகத்தை வைத்திருப்பது, நடப்பதும் தான் கொஞ்சம் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

ஹீரோயின் ஸ்ரீனிதி ஷெட்டிக்கு தமிழில் சினிமா நாம் அடிக்கடி பார்த்து பழகிப்போன பணக்கார வீட்டு திமிர்பிடித்த பெண் கதாபாத்திரம். சரியாக பொருந்திபோகிறார். யாஷை சீண்டி சண்டைக்கு இழுப்பது, அவரை நினைத்து உருகுவது என தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.

தெலுங்கு படத்தில் பார்ப்பது போது முரட்டு வில்லன்கள் பலர் படத்தில் நடித்திருக்கிறார். அவர்களில் இருந்து ஸ்டிலிஷாக தெரிகிறார் வசிஷ்ட சிம்ஹா. கருடாவாக வருபவர் செமையாக மிரட்டுகிறார். மற்றபடி படத்தில் யாஷ் ராஜ்ஜியம் மட்டும்.

1970-களின் இறுதியில் கோலார் தங்க வயலை கைப்பற்ற மாஃபியாக்கள் இடையே நடைபெற்ற சண்டைகளையும், அதனால் ஏற்பட்ட கொடூரக் கொலைகளையும் பின்புலமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார் பிரசாந்த் நீல். நல்ல திரைக்கதை அமைத்து கதையை கொண்டு சென்றிருக்கிறார்.

முதல்பாதி படம் ஏனோதானோவென ராக்கியை பற்றிய ஓவர் பில்டப்பிலேயே செல்கிறது. அதனால் என்ன நடக்கிறது என புரிந்துகொள்ளும் முன்பே இடைவேளை வந்துவிடுகிறது. ஆனால் இரண்டாம் பாதி படத்தில் மிரட்டியிருக்கிறார் இயக்குனர்.

கோலார் தங்க சுரங்கம், அதை சுற்றிய கிராமங்கள், கொத்தடிமைகளாக வாடி வதைப்படும் மக்கள், அவர்களின் நம்பிக்கையற்ற வாழ்க்கை என படம் சுவாரஸ்யமாகிவிடுகிறது. தமிழில் இதுபோன்ற படங்கள் நிறைய வந்துவிட்டதால், கன்னடத்தில் வேண்டுமானால் புதிதாக தெரியலாமல்.

படத்தை மெருகேற்றும் வகையில் பின்னணி இசையை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ரவி பர்சுர். அதனாலேயே யாஷ் மீதான பில்டப்புகள் அதிகமாகிறது. சலாம் ராக்கி பாடல் நல்லதொரு ஓப்பனிங்கை தந்திருக்கிறது.

படத்தின் மற்றொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் புவன் கவுடா. கோலார் தங்க வயல் காட்சிகள் எல்லாம், அந்த இடத்தை அப்படியே நம் கண்முன் நிறுத்துகின்றன. குழப்பமான திரைக்கதையை தனது தெளிவான எடிட்டிங்கால் நேர்க்கோட்டில் பயணிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.

அன்பறிவின் சண்டை காட்சிகளுக்கு தனி பாராட்டுகள். ஒரு ராட்சசனை விளையாடவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அதேபோல், படத்தின் கலை வேலைபாடுகளுக்கும் தனி பாராட்டுகளை கூறலாம்.

படத்தின் மிகப்பெரிய மைனஸ் யாஷின் ஓவர் ஹீரோயிசம் தான். என்ன தான் தைரியமான ஆளாக இருந்தாலும், எதிரில் வருபவர்களை அடிப்பதற்கு ஒரு அளவுகோள் இல்லையா. அத்தனை கொலைகள் செய்யும் யாஷை காவல்துறை சும்மாவிட்டு வைத்திருக்குமா என்ன. இப்படி படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள். அதேபோல வசனங்களும் இது டப்பிங் படம் என்தை அடிக்கடி தெளிவு படுத்துகின்றன.

ஆனாலும் மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார்கள். கோலார் தங்க சுரங்கத்தை அச்சு அசலாக கண்ணில் காட்டியதற்காக, இந்த கேஜிஎப் - ஐ வரவேற்போம்.

மேலும் பல...

0 comments