Home Ads

Sunday 12 August 2018

`ப்ச்... காதல்லாம் சும்மா... பெட் ஷேர் டைம்பாஸ்'னு சொல்றாங்க ப்ரோ! - 'பியார் பிரேமா காதல்' விமர்சனம்

ஒரு நடுத்தர வர்க்கத்து யுவனுக்கும் நவயுக யுவதிக்கும் இடையேயான காதலும் காதல் சார்ந்த சண்டையும் சமாதனங்களுமே `பியார் பிரேமா காதல்.’

`ப்ச்... காதல்லாம் சும்மா... பெட் ஷேர் டைம்பாஸ்'னு சொல்றாங்க ப்ரோ! - 'பியார் பிரேமா காதல்' விமர்சனம்
அலுவலகத்து கம்ப்யூட்டரில் வின்டோவை ஓப்பன் செய்துவிட்டு, `வின்டோ' வழியாக பக்கத்து அலுவலகப் பெண் சிந்துஜாவைப் பார்த்து, லயித்து, காதலித்து உருகுவதையே முழுநேர வேலையாக வைத்திருக்கிறார் ஸ்ரீ. `செர்ரி நழுவி கேக்கில் விழுவதுபோல' ஒருநாள் ஸ்ரீயின் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்கிறார் சிந்துஜா. பசிக்கு தோசைக்கடையைத் தேடும் ஸ்ரீயும் பீட்சா கடையைத் தேடும் சிந்துஜாவும் ஒருகட்டத்தில் ஆல்கஹால் ஊற்றி நட்பை வளர்க்கிறார்கள். நட்புச் செடியில் குட்டிக்குட்டி குறும்புகளும் சந்தோஷங்களும் சச்சரவுகளும் பூத்துக் குலுங்க, காலத்தின் கோலத்தால் ஒருநாள் இரவு நண்பர்களுக்குள் `கசமுசா' நடந்துவிடுகிறது. அதே படுக்கையில் வைத்து `ஐ லவ் யூ' எனத் தன் நீண்டநாள் காதலை ஸ்ரீ சொல்ல, `வி ஆர் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். இது கேசுவலா நடந்தது' எனத் திகிலாக்குகிறார் சிந்துஜா. இப்படி `காமம் வேறு, காதல் வேறு, கல்யாணம் வேறு' எனக் கட்டம்கட்டி வாழும் சிந்துஜாவுக்கும் `மூணும் ஒண்ணுதான்' என கண்ணைக் கசக்கும் ஸ்ரீக்கும் இடையேயான உறவின் அடுத்தகட்டம் என்ன என்பதை யூத்ஃபுல்லாய், கலர்ஃபுல்லாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் இளன்.

அம்மாவை நல்லா வெச்சி பார்த்துக்கணும் என்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட, டீ, காபி மட்டுமே குடிக்கும் டீட்டோட்டலர் இளைஞனாக ஹரீஷ் கல்யாண். சூதுவாது தெரியாத நடுத்தரவர்க்கத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். நடிப்பில் ஃபர்ஸ்ட் க்ளாஸில் பாஸ் ஆகிறார், அடுத்த முறை டிஸ்டின்க்‌ஷன் வாங்கணும் ப்ரோ!

லாஸ் ஏஞ்சல்ஸில் உணவகம் திறக்க வேண்டும் என்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட, ஒரே தம்மில் பீர் பாட்டிலைக் காலியாக்கும் பெண்ணாக ரைஸா. நடிப்போ அயர்ன் பாக்ஸைப்போல நேரம் அதிகமாக ஆக சூடுபிடிக்கிறது. ஹரீஷ் கல்யாணுக்கும் ரைஸாவுக்கும் இடையேயான தாறுமாறான கெமிஸ்ட்ரிதான் படத்தின் மூச்சு. ட்ரூ ட்ரூ..!

ஹீரோவின் காதலுக்கு ஐடியா சொல்லும் `க்ளீஷே' ஐடியா மணி கதாபாத்திரத்தில் முனீஸ்காந்த். இன்னும் அவரை நன்றாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஆனந்த்பாபு, ரேகா, சுப்பு பஞ்சு எனப் படத்தில் சீனியர் நடிகர்களும் இருக்கிறார்கள். `இவனே', `சதீஷ்', `சாந்தி அக்கா' கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் கவனிக்கவைக்கிறார்கள். நல்ல பாத்திர வடிவமைப்பும்கூட.

வழக்கமான திரைக்கதையையும் சுவாரஸ்யமாக்குகின்றன, தமிழ் சினிமாவுக்கு புத்தம் புதிதான காட்சிகள். சிரிப்பு, அழுகை, கோவம், காதல் என எல்லா உணர்வுகளும் கலந்த காக்டெயிலாக கிரங்க வைக்கிறது திரைக்கதை. படத்தின் இறுதிப் பகுதிகள் மட்டும் முகத்தில் தண்ணியைத் தெளிக்கின்றன. இந்தத் தலைமுறையினருக்கு காதலின் மீதான புரிதல்களையும் அதிலுள்ள சிக்கல்களையும் பேசுகிறது படம். காதலர்களின் எல்லாத் தரப்பு நியாயங்களையும் பேசி, இறுதியாக என்ன முடிவெடுப்பது என்பது தெரியாமல், அந்த வாய்ப்பை நம்மிடமே கொடுத்திருக்கிறார் இயக்குநர். எல்லாக் தெய்வீக காதலர்களுக்கும் இடையே ஓர் அமெரிக்க மாப்பிள்ளை கேட்டகிரி பலி ஆடு சிக்குமல்லவா. அதேபோல், இந்தப் படத்தில் ஒரு பெண்ணை பலிஆடு ஆக்கியிருக்கிறார்கள் அந்தப் பொண்ணு யாருக்கு என்ன பாவம் பாஸ் பண்ணுச்சு? காதலர்களின் நியாய, அநியாயங்களை எல்லாம் பேசுபவர்கள் இந்தப் பலியாடுகளை பற்றியும் பேசியிருக்கலாம். மக்களுக்கு இன்னும் தெளிவான புரிதல் கிடைத்திருக்கும் இயக்குநர் இளன்.

ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சாரியாவின் கேமராவில் `காதல்' இன்னும் அழகாகப் படமாகியிருக்கிறது. கலை இயக்குநர் தியாகராஜன், ஆடை வடிவமைப்பாளர்கள் ஜப்ரோன் நிஸார், மகேஸ்வரி ஆகியோருக்கும் இதில் பாதி பங்குண்டு. இரண்டாம் பாதியில் மட்டும் காட்சிகளின்மீது கருணை காட்டி வெட்டாமல் விட்டுவிட்டார் படத்தொகுப்பாளர் மணிக்குமரன். `பியார் பிரேமா காதலு'க்கு இசையால் பிங்க் நிறம் அடித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பின்னணி இசை துறுத்தாமல் காட்சிகளோடு பிணைந்து பயணிக்கிறது. பாடல்களோ ஆல்ரெடி ஹிட்! இதுவரை 90'ஸ் கிட்ஸுகளுக்கு மட்டும் ஆஸ்தான இசை வித்தகராக இருந்த யுவன், இப்படத்தின் மூலம் 2K கிட்ஸின் ப்ளே லிஸ்டிலும் இடம் பிடிப்பார்.

`பியார் பிரேமா காதல்', இளைஞர்கள் பார்த்துக் கொண்டாட பக்காவான படம். குழந்தைகளிடமிருந்து மட்டும் தள்ளி வையுங்கள்.

No comments:

Post a Comment