Home Ads

Monday 15 December 2014

இயேசுவும் எஸ்தரும்

அதிகாலை எழுந்து அவசரமாக தலைக்கு குளித்து  துவட்டுவதை அதிசயமாக பார்க்கும் பாட்டியை சட்டை செய்யாமல், ’மடத்துக்கு போயிட்டு வரேன் பாட்டி’  (ராகவேந்திரர் பிருந்தாவனம்) என்று பதிலுக்கு காத்திராமல் ஓடினேன்.  

திரும்பவும் வீட்டுக்குள் நுழையும் நேரம் பாட்டி பூஜை அறையில் இருந்தாள். அவசர அவசரமாக இரண்டு இட்லியை மட்டும் பிட்டு போட்டு விழுங்கி,லஞ்ச் பாக்ஸை எடுத்துக் கொண்டு பள்ளிக் கூடத்துக்கு அரைமணி நேரம் முன்னதாகவே போய்ச் சேர்ந்து  காத்திருக்கத் துவங்கினேன்.

மனம் முழுவதும் படபடப்பாக  இருந்தது. காரணம் அன்று அதிசய அப்பத்தை  கொண்டு வந்து காட்டுவதாக எஸ்தர் ஒப்புக் கொண்டிருந்தாள். 

எஸ்தர்...
ஜீலை மாதம் பள்ளிக்கூடம் தொடங்கிய சில தினங்களில் வகுப்புக்கு புது வரவாக அறிமுகமானாள். குண்டு கன்னங்களும் துருதுரு விழிகளும் மாநிறமாய் முகத்தில் சதாசர்வமும் புன்னகை ஒட்டி வைத்தாற்ப்போல் பார்த்ததும் மனதில் பச்சக்கென்று ஒட்டி கொண்டாள்.
சேர்ந்த சில நாட்களிலேயே,  அவள் கணக்கில் புலி என்று அறிய வந்ததும் போட்டி போட்டு அவளை நட்பாக்கிக் கொண்டு அன்று முதல் அவள் அடிமையானேன். அரைப்பக்க கணக்கை அரை நொடியில் போடும் அவள் திறனை அகன்ற விழிகளுடன் பார்த்துக் கொண்டிருப்பேன்.
வகுப்பு தொடங்கும் போதும், பின் மதிய உணவுக்கு முன்பும்  அவள் சிலுவை குறி இடுவதை பார்த்து நானும் அவளிடமிருந்து நெற்றியில்,நெஞ்சில் பின் தோள்களில் என்று ஒருவாராக சிலுவை இட கற்றுக் கொண்டேன்.
தினம் தினம் அவள் ஒரு இயேசுவின் லீலையை சொல்ல சொல்ல பிரமித்துக் கேட்டு கொண்டிருப்பேன்.ச்சே கிருஷ்ணரெல்லாம் சும்மா, இயேசு தான் சூப்பர் என்று முழுவதும் ஒரு கிறிஸ்துவச்சியாய் மாறிக் கொண்டிருந்தேன்.
அவள் வீட்டில் இயேசுவை ஜபித்து பூஜையில் வைத்த அப்பம் இரட்டிப்பாகிய அற்புதத்தை பல விதமாக அவள் கூறும் போது,சுற்றி உட்கார்ந்து கேட்கும் நாங்கள் நால்வர் வாயிலும் ஈ,எரும்பு ஏன் பாம்பு போனால் கூட அதிசயமில்லை.
அவள் காலில் விழாத குறையாய் கெஞ்சி கேட்டு அன்று அதை கொண்டு வந்து காண்பிப்பதாய் வாக்களித்திருந்தாள்.எல்லாரும் குளித்து சுத்தபத்தமாய் அவளுக்காக காத்திருந்தோம்.ப்ரேயர் சரியாய் துவங்கும் நிமிடம் வந்து எங்களை கடுப்பேத்தி,பின் வகுப்புகளில் மனம் செல்லாமல் மதிய இடைவேளையில் சாப்பிட்டதும் காட்டறேன் எனும் அவள் கட்டளைக்கு அடங்கி 2 நிமிஷத்தில் அள்ளி போட்டுக் கொண்ட பின்,அலட்டலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து சதுரமான அந்த டப்பாவை திறந்து காட்டினாள்.
பாத்தியா இது தான் முதல்ல வைச்சது பார் இது இரண்டாயிருக்கு,ஆனா இதெல்லாம் சும்மா இல்லை,தினம் 2 வேளை ஜெபிச்சு பிரார்திக்கனும் என்று சரியாக கூட காட்டாமல் மூடி விட்டாள் பாக்ஸை.எனினும் அன்று எனக்கு உறக்கம் தொலைந்து போனது.
காலாண்டு பரிட்சையின் போது வீட்டிலிருந்து கொண்டு வந்த வேளாங்கண்ணி மாதாவின் புனித நீரை தெளித்து கணக்கு பரிட்சைக்கு முன் எங்களுக்காக ஸ்பெஷலாக ஜெபித்தாள்.
அந்த பரிட்சையில் நாங்கள் எல்லோரும் அதிக மதிப்பெண்கள்,வாழ்க்கையில் முதன் முதலாக நான் கணக்கில் நூற்றுக்கு நூறு.பாட்டி  மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடினாள்.
சிலுவைக்குறி போட்டுகிட்டு பரிட்சை எழுதினாலே நூற்றுக்கு நூறு வாங்க வைக்கிற இயேசு,முழுவதும் கிறிஸ்டியனா மாறினா நம்மள டாப்ல கொண்டு போயிடுவார் என்று உறுதியாக நம்ப துவங்கினேன்.உறக்கம் தொலைத்து யோசித்ததில் இயேசு, ராகவேந்திரரை சில வாக்குகள் வித்தியாசத்தில் வென்றே விட்டார்.
அவளிடம் பகிர்ந்த போது அலட்டலாய் அதுக்கெல்லாம் வகுப்பு உண்டு(அங்கேயுமா என்ற என் மைண்ட் வாய்ஸை ஆஃப் பண்ணினேன்) அப்புறமா நீ மடத்துக்கெல்லாம் போக கூடாது,திருநீரெல்லாம் இட கூடாது என்று ஒரு குண்டை தூக்கி போட்டாள்
எதோ சத்தம் போடாம இயேசுவை நம் சகாவாக்கி கொள்ளலாம் என்று நினைத்த நினைப்பில் மண்,பாட்டியின் விளக்குமாத்தடி நினைவுக்கு வர சோகத்தில் மூழ்கி திரிந்தேன்.
அரையாண்டு பரிட்சை நடக்கும் போது ஒரு சிலுவை தொங்கும் மெல்லிய வெள்ளி போன்ற உலோகத்தில் ஒரு சங்கிலியும்,ஒரு தமிழ் பைபிள் புத்தகத்தையும் எங்கள் குழுவுக்கு பரிசளித்தாள் எஸ்தர்.
 
தன் வீட்டில் கிறிஸ்துமஸுக்கு சுட்டது என்று முதன் முதலில் கேக் என்கிற வஸ்துவை  எனக்கு அறிமுகம் செய்தாள்,மென்மையான  இனிப்பான அந்த உணவின் ருசிக்கு அடிமையானேன்.  அண்ணனிடம் பெருமையாக இதை பிரஸ்தாபிக்க அதுல முட்டை போட்டிருக்குமே அதையா சாப்ட்ட,இரு பாட்டி கிட்ட சொல்றேன் என்று மிரட்டி என் பங்கு மிட்டாய்களையும், பிஸ்கெட்களையும் ஆட்டைய போட ஆரம்பித்தது தனிக்கதை.

பதில் தாள்களை விநியோகிக்கும் அந்நன்னாளும் வந்தது.கணக்கு ஆசிரியை பதில் தாள்களை எங்களுக்கு விநியோகிக்கும் போது மட்டும் இரண்டு முறை  திருப்பி பார்த்தார். நூற்றுக்கு நூறு வாங்கி எங்கள் குழு உற்சாக வெள்ளத்தில் கரை புரண்டது.
அடுத்த நாள்  எங்கள் அனைவரையும் முதல் முதலாக சர்ச்சுக்கு கூப்பிட்டு செல்வதாக வாக்களித்திருந்தாள் எஸ்தர். எந்த இடத்தில் சந்திக்கனும்,வீட்ல என்ன பொய் சொல்லிட்டு வரனும் என்று தீர்மானித்தாயிற்று.( நான் மடத்துக்கு போயிட்டு வரேன்னு சொல்லிக்கலாம் என்று வார்த்தைகளை ஒத்திகை பார்த்து வைத்திருந்தேன்).
யூனிபார்ம் களைந்து உடை மாற்றி கிளம்பும் சமயம் பாட்டி,எங்கேடி போற என்று கேட் போட்டாள்.மடத்துக்கு பாட்டி என்று திகிலுடன் உளரும் போது,அதெல்லாம் வேண்டாம் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்தறேன்னு வேண்டிண்டிருக்கேன்,நீ நூத்துக்கு நூறு வாங்கினதுக்கு,நானும் வரேன் என்று 144 போட்டாள். இயேசு கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த நூறு மதிப்பெண்களை பாட்டி ஆஞ்சநேயருக்கு தாரை வார்த்தது பிடிக்கவில்லையெனினும் உதைக்கு பயந்தும், வடைக்கு ஆசைப்பட்டும் கிளிம்பினேன்.
அடுத்த நாள் பள்ளியில் என்னிடம் முகம் கொடுத்து தோழிகளும் எஸ்தரும் பேசவில்லை.ஒரு வாரம் பாட்டி வீட்டில் செய்து வைத்த கடலைஉருண்டை,முறுக்கு இத்யாதிகளை கொண்டு கொடுத்து ஒரு வழியாக சமாதானப்படுத்தினேன்.
முழு பரிட்சை லீவில் சர்ச்சுக்கு அழைத்து போகும் வாக்கை எனக்கு மிரட்டலுடன் அளித்தாள் எஸ்தர்.
கடைசி முழு பரிட்சையின் முடிவில் அப்பாக்கு வேற ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுச்சு என்று எங்களை கதற வைத்து விட்டு கலங்கிய கண்களுடன் விடை பெற்றாள்.
பரிட்சை லீவுக்கு கிராமத்துக்கு போய் கொட்டமடித்தில் சோகத்தை தொலைக்க முடிந்தது.அங்க இருந்த தோழிகளுக்கெல்லாம் சிலுவை போட சொல்லி கொடுத்தது தனிக்கதை.
அடுத்தடுத்த வருடங்களில் மீண்டும் கணக்கில் ஐம்பது மார்க்குக்கு முக்க துவங்கினோம்.சிலுவை,பிரார்தனைகள் எதுவும் உதவவில்லை. ஆஞ்சநேயருக்கு வடைமாலை லஞ்சமெல்லாம் கூட செல்லுபடியாகவில்லை.
நூற்றுக்கு நூறு வாங்க வைத்தது இயேசு மட்டுமே அல்ல, எஸ்தரும்  தான் என்று உணர்ந்த நொடியில் சிலுவை சங்கிலி எல்லாம் எஸ்தர் நினைவாக ஜாமெண்ட்ரி பாக்ஸில் ஒளிந்துக் கொண்டது.
இன்றும் கிறிஸ்துமஸ் காலங்களில் பலர் வீடுகளில் தொங்கும் ஒளி நட்சத்திரங்களை கண்ணுறுகையில் எஸ்தரும்,காலமும் சமூகமும் என்னிடமிருந்து விலக்கி வைத்த என் பால்ய நண்பன் கிறிஸ்துவும்  நினைவுக்கு தவறாமல் வருகிறார்கள். இன்றைய தேதிவரை ஒரு சர்ச்சுக்குள் கூட செல்லாதது ஒரு மனக்குறையாகவே தேங்கி நிற்கிறது.

No comments:

Post a Comment