Home Ads

Friday, 12 December 2014

நிர்வாணம்




நிர்வாணம்  ஆபாசமானது என்று பிற்காலம் அறியப்படும்,மூடியிருப்பதில் ஆர்வம் வளரும் என்று எண்ணி இருந்தால் ஆதி மனிதன் நாகரீக வளர்ச்சியில் உடை என்பதை தவிர்த்து விட்டிருப்பானோ?.ஹார்மோன் எனும் விஞ்ஞானம் தாண்டி கூச்சம்,ஆர்வம் இவற்றிற்க்கு உடை ஒரு காரணியாக  இருக்குமோ என்பது என் புரிதல்.

உடன் பிறந்த பெண்களை நேசித்த ஒரு சகோதரனால் அவள் சாயலில் இருக்கும் ஒரு பெண்ணின் நிர்வாணத்தை கற்பனையில் கூட காண இயலாது.

முதல் முதலில் நிர்வாணமாய் தன் கரங்களில் தவழ்ந்த பெண் மகவின் 12 வயது உடல் திடிர் வளர்ச்சியை கண்டு  பூரிப்பும்,தன்னிடமிருந்து விலகி சென்ற வலியையும் சுமக்கும் ஆணுக்கு,அந்த வயதில் கண்ணுறும் எல்லா குழந்தைகளும் அவன் குழந்தைகளாகி போகின்றனர்.டீனேஜ் பெண்ணின் நிர்வாணப் படம் கிளர்ச்சிக்கு பதில் அதிர்ச்சியையும் துளி துக்கத்தையும் அவனுள் விதைத்து செல்கிறது.சாதாரண பிறழாத மனநிலை உள்ள மனிதனை பற்றிய என் கணிப்புகள் இவை.

ரணசிகிச்சை மேஜையில் உயிரின் ஆர்வம்,பயம் தொக்கி நிற்க அரை மயக்கத்தில் கிடக்கும் நிர்வாண உடல் மருத்துவர்/வச்சி யால் ஒரு உயிராக மட்டுமே பார்க்கப்படுகிறது.உடல் நிலை தேறி தன்னை சந்திக்க வரும் அவ்வுயிரை காண்கையில் அந்த கண்களில் மகிழ்ச்சியின் சாயலன்றி நிர்வாணத்தின் சாயல் இருப்பதில்லை.உடலை கிழித்து கூறு போட்டு கற்கும் அம்மருத்துவம் அம்முதிர்ச்சியை அவர்களுக்கு கொடுக்கவில்லையெனில் கற்ற கல்வி வீணே.

பிரசவ அறைக்கு அழைத்தாலும் உட்செல்ல இந்திய ஆண்களுக்கு பெரும்பாலும் திராணி இருப்பதில்லை.காலை இருபுறமும் கட்டி நிர்வாணத்தின்  கூச்சம் சிறிதும் இன்றி அவள் கதறுவதை காண நேர்கையில் அவள் நிர்வாணம்,கன்னியாகுமரி அம்பிகையை கண் முண் கொண்டு வர கூடும்.

நிர்வாணத்தை,உடல் கூறுகளை ஆணுக்கு புரிய அல்லது தவறாக புரிதலை தராமல் இருக்க  வைப்பதன் பொறுப்பும் சுமையும் கொண்டது பெண் இனம்.பாலியல் கிளர்ச்சிகளை மட்டுமே தன் உடலை வைத்து வெளிப்படுத்தும் ஒரு சில பெண்களின் சுயலாபத்துக்காக தன் சக உயிரினம் பாதிக்கப்படும் என்ற புரிதல் இன்றி இவர்கள் இயங்கும் மனநிலை கேள்விக்குரியே.பாலியல் தொழில் செய்யும் பெண்களை தவிர மற்ற பெண்கள் இவ்விதம் செய்வது நாம் வாழும் சூழலை சமூகம் வளர்ச்சியடையாதிருப்பதை உணராது,நான் நிர்வாணமாக நடந்தாலும்  நீ கையை தட்டி பாராட்ட வேண்டுமே அன்றி கையை என் மேல் வைக்க கூடாது என்று உளறும் மனநிலை வேதனையானது.

 சக மனுஷியை உயிராக,மனநிலை பிறழ்ந்த பெண்ணின் அரை நிர்வாணத்தை மறைக்க முயலும் ஒரு ஆணை வளர்ப்பதில் ஒரு பெண்ணின் பொறுப்பு மிக அவசியமாகிறது,அவள் மட்டுமே வாரிசுகளை சுமந்து அடுத்த தலைமுறையை உருவாக்குகிறாள்.

உடல்நிலை சரியில்லாத தாயின் உடை மாற்றும் பொறுப்பான ஆண்களை கண்ணுறும் நேரத்தில் அவனை விட  அந்த தாயின் மீதுள்ள மரியாதை கூடுகிறது. இல்லத்தில் உள்ள தாயும் தமக்கையும் சொல்லி கொடுக்கும் பண்புகளை சுமந்த ஆண் முழுமையான ஆண்மகனாக வளர்கிறான்.

நிர்வாணம் பற்றிய சரியான புரிதல்,கல்வி,பாலியல் வன்கொடுமைகளை குறைக்கும் மிகப்பெரிய கருவியாக இருக்கும் என்பது என் புரிதல்.பாட்டு பாடி,பேசி,சிரிக்க வைக்கும் ஒரு தொலைக்காட்சி பெட்டியை பாகம் பாகமாக பிரித்து ஆராய்ந்து தொழில்நுட்ப கூறுகளை அறியும் போது அதன் மீதுள்ள பிரமிப்பு அகலுவது போன்ற ஒரு பாலியல் கல்வி இந்திய தேசத்தின் உடனடி தேவை.

மருத்துவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அனாடமி வகுப்புகள் பாலியல் மற்றும் பொது கல்வி முறையின் ஒரு பாகமாக்குதல் வேண்டும் என்பது என் கருத்து.

பாலியலுக்கு மட்டும் முன் வைக்கப்படும் நிர்வாணத்தை அதை தாண்டிய மனநிலை கூறுகளைக் கொண்டு ஆராயும் மனப்பக்குவம் வர வேண்டும் என்பது என் சிந்தனை.

பூப்பெய்தும் தன் மகளின் நிர்வாணத்தை காண்கையில் அந்த தாயின் கண்களில் தோன்றுவது பெருமையும்,பூரிப்புமாக மட்டுமே இருக்க வேண்டும்.அவள் கண்களில் அச்சத்தின் சாயலை களைய தேவை நம் சமுதாயத்தில் மாற்றங்கள்.

மனநிலை பிறழ்ந்தவர்களிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வற்புறுத்தி கற்கச் செய்யும் சமூகம்,ஆரோக்கியமான மனநிலை கொண்ட அடுத்த சமுதாயத்தை வளர செய்யும் பொறுப்பையும் உட்சுமந்தால் இந்நிலை சாத்தியமே.

No comments:

Post a Comment